ADDED : மார் 14, 2024 06:33 AM

மாநிலத்தின் 'ஹைவோல்டேஜ்' தொகுதிகளில், மைசூரும் ஒன்றாகும். இதற்கு முன்பு இங்கு காங்கிரஸ், ம.ஜ.த., இடையே நேரடி போட்டி இருந்தது.
தற்போது பா.ஜ.,வின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. பிரதாப் சிம்ஹா தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று, எம்.பி.,யானார். இம்முறையும் சீட் எதிர்பார்த்தார். ஆனால் இவருக்கு பதிலாக, அரச குடும்பத்தின் யதுவீர் உடையாரை நேற்று பா.ஜ., வேட்பாளராக அறிவித்து விட்டது.
பா.ஜ., யாரை வேட்பாளராக்குகிறது என்பதை தெரிந்து கொள்ளவே, காங்கிரஸ் காத்திருந்தது. இதற்கு முன்பு லட்சுமண், விஜயகுமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
தற்போது யதுவீர் களமிறக்கப்பட்டுள்ளதால், அவரை எதிர்த்து முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சின் பேரன் சூரஜ் ஹெக்டேவை களமிறக்க, காங்கிரஸ் ஆலோசிக்கிறது. இவர் தற்போது கர்நாடக காங்கிரஸ் துணை தலைவர், கர்நாடக வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் வாரிய துணை தலைவர், மஹாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபாரின் காங்கிரஸ் தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
யதுவீரை எதிர்த்து, சூரஜ் ஹெக்டே களமிறங்கினால், 35 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மீண்டும் திரும்பும். 1991ல் மைசூரு தொகுதியில், அரச குடும்பத்தின் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேவராஜ் அர்சின் மகள் சந்திரபிரபா அர்ஸ் களமிறங்கினார். இதில் சந்திரபிரபா வெற்றி பெற்றார்.
தற்போது அரச குடும்பத்தின் யதுவீர், தேவராஜ் அர்சின் பேரன் சூரஜ் ஹெக்டே போட்டியிட்டால், 35 ஆண்டு வரலாறு திரும்பும்.

