தென்மேற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல் விறுவிறு முதல் நாளில் அமைதியான 55 சதவீத ஓட்டுப்பதிவு
தென்மேற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல் விறுவிறு முதல் நாளில் அமைதியான 55 சதவீத ஓட்டுப்பதிவு
ADDED : டிச 05, 2024 07:20 AM

பெங்களூரு: தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மூன்று மண்டலங்களில், தொழிற்சங்க அங்கீகார தேர்தல், முதல் நாளில் அமைதியான முறையில் நடந்தது. இன்றும், நாளையும் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடக்கிறது.
ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும், போராடுவதற்கும் ஏராளமான தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே, மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு நடத்த முடியும்.
இந்த தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதற்காக தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 11 ஆண்டுகளாக ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு டிசம்பர் 4, 5, 6 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சின்னம்
தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஹுப்பள்ளி, பெங்களூரு, மைசூரு ஆகிய மண்டலங்களில் நடக்கும் தேர்தலில் தென்மேற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், தென்மேற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், என்.ஆர்.எம்.எஸ்., ஆகிய சங்கங்கள் களத்தில் உள்ளன.
தென்மேற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சங்கத்திற்கு புலி சின்னம், தென்மேற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்திற்கு மரம், என்.ஆர்.எம்.எஸ்.,க்கு டிராக்மேன் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
பெங்களூரு மண்டலத்திற்கு உட்பட்டு பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், யஷ்வந்த்பூர், எஸ்.எம்.வி.டி., பங்கார்பேட்டை, பெங்களூரு கன்டோன்மென்ட், ஒயிட்பீல்டு, கெங்கேரி, கே.ஆர்.புரம், குப்பம், மாலுார், பானஸ்வாடி, கவுரிபிதனுார், எலஹங்கா, சத்யசாய் பிரசாந்தி நிலையம், தர்மபுரி, ஓசூர், மாரிகுப்பம், உரிகம், கோரமண்டல் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
மைசூரு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்டு மைசூரு, ஹாசன், அரிசிகெரே, கடூர், பீரூர், மாண்டியா, சாம்ராஜ்நகர், தாவணகெரே, ஷிவமொக்கா, நஞ்சன்கூடு, ஹரிஹரா, சாகர், சுப்பிரமணியா ரோடு ரயில் நிலையங்கள் உள்ளன.
ஹூப்பள்ளி ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்டு ஹூப்பள்ளி, பெலகாவி, பல்லாரி, விஜயபுரா, தார்வாட், ஹொஸ்பேட், வாஸ்கோடாகாமா, கதக், லோண்டா, பாகல்கோட், தோரணகல்லு, கொப்பால், கங்காவதி, சிந்தனுார், கட்டபிரபா, ராணிபென்னுார் ஆகிய ரயில் நிலையங்களும் வருகின்றன.
இந்த ரயில் நிலையங்களில் டிராக்மேன், டிக்கெட் பரிசோதகர், ரயில் நிலைய பொறுப்பாளர், இன்ஜினியர் உட்பட 36,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக குரல் கொடுக்கத்தான் தொழிற்சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
விரலில் மை
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தின் 11வது நடைமேடை அருகே ஹவுஸ் கீப்பிங் டிரெயினிங் சென்டரில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. ரயில்வே ஊழியர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
ஓட்டுப்பதிவு மையத்திற்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக நடக்கும் பொதுத்தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் 'பூத் ஸ்லிப்' வழங்கப்பட்டது. ஓட்டுப் போட்ட பின் ஊழியர்கள் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது.
பூத் சிலிப் வாங்க வந்த ரயில்வே ஊழியர்களிடம் தங்களது சங்கத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என, மூன்று சங்கத்தினரும் கேட்டுக் கொண்டனர்.
55 சதவீத ஓட்டுகள்
ரயில்வே ஊழியர்களின் பெயர், அவர்களின் பதவி, பி.எப்., நம்பர், பூத் நம்பர், பூத் சீரியல் நம்பர் அடிப்படையில் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டது. ஓட்டுச் சாவடி முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இன்று இரண்டாவது நாள் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நாளை கடைசி நாள். பதிவான ஓட்டுகள் 12ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் எந்த தொழிற்சங்கம், 43 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுகிறதோ, அதுவே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக கருதப்படும்.
முதல் நாளில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட மூன்று மண்டலங்களிலும் 55 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக, தென்மேற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொது செயலர் ராகவேந்திரா தெரிவித்தார்.