ஜனாதிபதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
ஜனாதிபதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
ADDED : ஜன 28, 2025 02:08 AM
புதுடில்லி, குடியரசு தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், வரவேற்பில் துவங்கி, உணவு வகைகள் வரை அனைத்திலும் தென் மாநில பாரம்பரியம் மற்றும் பெருமை பறைசாற்றப்பட்டு இருந்தது.
ஜவுளி கண்காட்சி
குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நேற்று முன்தினம் மாலை, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விருந்து நிகழ்வில் தென் மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது.
இது குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உடையணிந்த ஜோடிகள் வரவேற்பறையில் நின்று விருந்தினர்களை அந்தந்த மாநில மொழிகளில் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் தென் மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. அம்மாநிலங்களில் புகழ்பெற்ற ஜவுளி கண்காட்சிகளும் நடந்தன.
குத்துவிளக்கு
குறிப்பாக கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், தமிழகத்தின் தஞ்சையில் உள்ள நாச்சியார்கோவில் பகுதி யில் செய்யப்படும் பித்தளை குத்துவிளக்குகள் இடம் பெற்று இருந்தன.
இதேபோல பிற தென் மாநிலங்களின் பிரசித்தி பெற்ற கைவினைப் பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
மேலும், விருந்திலும் கோங்குரா ஊறுகாய் அடைக்கப்பட்ட குழிப்பணியாரம், ஆந்திராவின் சின்ன வெங்காய சமோசா, உடுப்பி உத்தினா வடை, ரவா கேசரி, பருப்பு பிரதமன், மைசூர் பாகு உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

