உ.பி. தேர்தல் தொகுதி ஒதுக்கீடில் மல்லுக்கட்டு; 26 தொகுதிகள் தரும் சமாஜ்வாதி, 67 கேட்டு காங். அடம்
உ.பி. தேர்தல் தொகுதி ஒதுக்கீடில் மல்லுக்கட்டு; 26 தொகுதிகள் தரும் சமாஜ்வாதி, 67 கேட்டு காங். அடம்
ADDED : நவ 24, 2026 04:42 PM

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதிகள் எண்ணிக்கை, தொகுதிகளை அடையாளம் காண்பது என இரு கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளன.
தொகுதி பங்கீடு குறித்து, சமாஜ்வாதி, காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தரப்பில் 67 தொகுதிகள் தருமாறு கேட்கப்பட, சமாஜ்வாதியோ 26 தொகுதிகளுக்கு மட்டுமே இசைவு தெரிவித்து உள்ளது.
இந்த 26 தொகுதிகள் பட்டியலில், 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற ராம்பூர்காஸ் மற்றும் ப்ரெண்டா தொகுதிகளும் அடக்கம். இதுதவிர 2ம் இடம் பிடித்த மதுரா, கேராகர், ஜகதீஷ்புர், கிட்வாய் நகர் ஆகிய 4 தொகுதிகளையும் தரவும் சமாஜ்வாதி முன் வந்துள்ளது.
பாக்பத்,கோடிநகர், ஹாபூர், ஜெவார், சயானா, குர்ஜா, கைர், இக்லாஸ், மாண்ட் ஆக்ராநார்த், பதேபூர் சிக்ரி உள்பட 20 தொகுதிகளை எடுத்துக் கொள்ளுமாறு காங்கிரசிடம் சமாஜ்வாதி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சமாஜ்வாதி ராஜ்ய சபா எம்பி ராம் கோபால் யாதவ் கூறுகையில், ' பேச்சுவார்த்தையின் போது என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லி விட்டோம். காங்கிரசுக்கு 26 தொகுதிகளை தர உள்ளோம். அந்த தொகுதிகள் என்ன என்றும் தெரிவித்துவிட்டோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்' என்றார்.
ஆனால் காங். கட்சிக்குள் 26 தொகுதிகளுக்கு அதிருப்தி எழுந்துள்ளது. 67 தொகுதிகள் கொண்ட பட்டியலில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள போவதில்லை என்று உ.பி. காங். நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
அடுத்தடுத்த நாட்களில் தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
