ADDED : டிச 06, 2025 02:13 AM

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு வழியாக சபரிமலைக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிகம் செல்வர். அவர்கள் கடந்த சீசன் வரை வண்டிபெரியாறில் மினி ஸ்டேடிய மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இளைப்பாறி சென்றனர். தற்போது ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டது.
அதனால் வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்து கொடுக்குமாறு வண்டிபெரியாறு ஊராட்சி செயலர் பிற்றிபினோய், ஹாரிசன் மலையாளம் தேயிலை கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த கம்பெனிக்கு சொந்தமான வாளார்டி எஸ்டேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி 44 ஆயிரம் சதுர பரப்பளவில் 300 வாகனங்கள் நிறுத்தும் வகையில் இடவசதி செய்து பயன்பாட்டுக்கு வந்தது.
அதனை வண்டி பெரியாறு இன்ஸ்பெக்டர் அம்ரித் ஷா சிங் நாயகம் துவக்கி வைத்தார். ஹாரிசன் மலையாளம் கம்பெனி கூடுதல் மேலாளர் பிஜோமானுவேல், சீனியர் மேலாளர் ஜெயபிரகாஷ், ஊராட்சி செயலர் பிற்றிபினோய், மோட்டார் வாகனத் துறை அதிகாரி கிஷோர் பங்கேற்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தை மண்டல கால சீசன் முடியும் வரை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு கட்டணமாக சிறிய தொகை வசூலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

