ADDED : அக் 21, 2024 12:29 AM

* அண்ணன், தம்பி
கன்னடர் - தமிழர் மாநாடு, மாநாடாக மட்டும் இருக்காமல், பல தமிழ் உறவுகளை ஒன்றிணைத்து உள்ளது. கர்நாடகாவின் பல பகுதிகளில் வசிக்கும், தமிழர்கள் குடும்பம், குடும்பமாக வந்து உள்ளனர். ஏற்கனவே கன்னடர்கள், தமிழர்கள் அண்ணன், தம்பி போல வாழ்கிறோம். இந்த மாநாட்டின் மூலம் கன்னடர், தமிழர் உறவு இன்னும் ஆழமாகும்.
- எம்.ஜி.ஆர்., ரவி, தலைவர், உரிமை குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்., நலிவுற்றோர் அறக்கட்டளை.
=========
* திருவள்ளுவர் சிலை
கன்னடர் - தமிழர் மாநாடு மாபெரும் வெற்றி உள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டது சிறப்பு. அவரால் தான் ஹலசூரு ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. கன்னட ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடாவும் கலந்து கொண்டு சிறப்பாக பேசினார். இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய எஸ்.டி.,குமாருக்கு நன்றி.
- ஸ்ரீதரன், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் செயலர்.
==========
* சிலைக்கு மரியாதை
கர்நாடகாவில் கன்னடர் - தமிழர் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் மாநாடு. வரும் காலங்களில் திருவள்ளுவர் ஜெயந்தி அன்று, அவரது சிலைக்கு கன்னடர்களும் மரியாதை செய்வர். சர்வக்ஞர் ஜெயந்தி அன்று, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த, கர்நாடகாவில் இருந்து கன்னடர்களை அழைத்து செல்லவும் திட்டம் வைத்து உள்ளோம்.
- தி.கோ.தாமோதரன், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர்.
========
* மிகுந்த மகிழ்ச்சி
மாநாடு மிக சிறப்பாக நடந்தது. தாய்மொழி கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.,குமாருடன் சேர்ந்து பயணித்தோம். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழர்கள் வந்தனர். இம்மாநாடு தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும். நாராயண கவுடா வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரை பற்றி சிறப்பாக பேசினார். மாநாடு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
- ராஜசேகர், பொது செயலர், தன்னுரிமை மனமகிழ் மன்றம்.
* பெருமை பேசும்
பல்வேறு மாநில தமிழர்கள் ஒன்றிணைகிற இம்மாநாட்டை, பெருமைக்குரியதாக காண்கிறோம். இன்னும் நாம் சிதறி கிடப்பதில் அர்த்தமில்லை. தமிழர் பெருமை பேசும் மாநாடாக உள்ளது. கன்னட சகோதரர்கள், தமிழரின் கலாச்சாரத்தை அறிய இது ஒரு சந்தர்ப்பம். தமிழர் நலனுக்கான உரிமைக் கோரும் மாநாடாக அமைவதால் மகிழ்ச்சி பெருகுகிறது.
- பிரபுராம், தங்கவயல்.
****
*யாதும் ஊரே...
தமிழர்கள் அனைத்து தகுதிகளையும் கொண்டவர்கள். நட்பு ரீதியாக குறை காண முடியாது. பண்பாடுமிக்க தமிழர் மாநாடு, ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். தமிழோடு கன்னடத்தையும் பெருமைப்படுத்துவோம். கர்நாடகாவில் தமிழர்கள் இல்லாத இடமேயில்லை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' தத்துவம், இங்கு ஒன்றிணைய செய்துள்ளது.
- கன்னட கவி.ஜெயராமன், தாவணகெரே
****
*புதிய முயற்சி
தமிழர்கள் ஒன்றாவதை கண்டு, அகமகிழ்வதை விட வேறென்ன வேண்டும். இதற்கு முன் கர்நாடகாவில் தமிழ் இலக்கிய மாநாடு நடந்துள்ளது. ஆனால் கன்னடர் -- தமிழர் இணைந்த மாநாடு நடப்பதே இதுவே புதிய வரலாறு. இதற்கான பெரும் முயற்சி மேற்கொண்ட மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் மற்றும் அதன் சிறகுகளுக்கு பாராட்டு.
- கோமதி, காக்ஸ்டவுன், பெங்களூரு.
****
* கலாசார பெருமை
கர்நாடகாவில் பெங்களூரு, தங்கவயல் தமிழ் சங்கங்கள் சார்பில் இன எழுச்சி மாநாடு, கலை இலக்கிய மாநாடு என பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழக தலைவர்கள், தமிழறிஞர்களை மட்டுமே வரவழைத்து தமிழுக்கு மகுடம் சூட்டப்பட்டது. ஆனால் இரு மொழி இணைந்த மண் சார்ந்த மாநாடு கலாசார பெருமையை வெளிப்படுத்துகிறது.
- கமல் முனிசாமி, தமிழ்ச்சங்கம், தங்கவயல்
***
*உயரிய சிந்தனை
கர்நாடகாவில் கன்னடர்களுடன் தமிழர்கள் மனஸ்தாபம் இல்லாமல் வாழ்கின்றனர். தமிழ் குடும்பத்தினர், மாநில மொழியான கன்னடத்திலும் படிக்கின்றனர்; பேசி பழகுகின்றனர். குறுகிய மனப்பான்மை யாருக்கும் தேவையில்லை. தாழாதே... மற்றவரை தாழ்த்தாதே என்ற உயரிய சிந்தனையின் அடையாளமாக இம்மாநாடு விளங்குகிறது.
-பிரபாகரன், ஷிவமொக்கா
***
*பாதுகாப்பு தலம்
தாவணகெரே, ஹூப்பள்ளி, குடகு, தங்கவயல், அரிசிகெரே, கொள்ளேகால், மைசூரு என பல இடங்களை சேர்ந்த தமிழர்கள் மாநாட்டில் சங்கமாகி உள்ளனர். தமிழர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்கும் தலமாக பார்க்கிறேன். இதுபோன்ற மாநாடுகள் பிற மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். முன்னாள் முதல்வர் எடியூரப்பா பங்கேற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
- பார்த்திபகுமார், பத்ராவதி.