ADDED : அக் 16, 2025 10:06 PM
புதுடில்லி:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள், அவசர அழைப்பை ஏற்று அந்த இடங்களுக்கு செல்லும், க்யு.ஆர்.வி., எனப்படும் வாகனங்களை பணியில் அமர்த்த, டில்லி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வரும் அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய நாட்களில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தலைநகரின் அனைத்து மாவட்டங்களிலும், தீ மற்றும் தீத்தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தீ விபத்து ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களில், வரும், 19 மற்றும் 20ம் தேதிகளில், அவசர கால அழைப்பை ஏற்று அந்த இடங்களுக்கு செல்லும் வாகனங்களுடன் வீரர்களை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் தலா, ஐந்து வீரர்கள் இருப்பர். உள்ளூர் போலீசாருடன் இணைந்து இவர்கள் செயல்படுவர்.
அதுபோல, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், இந்த சிறப்பு தீயணைப்பு குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்கள் எளிதாக சென்று வர தேவையான ஏற்பாடுகளை செய்வர்.
அதுபோல, குடியிருப்புகளில் இருப்போருக்கு தேவையான அறிவுறுத்தல் செய்து, தீயணைப்பு வாகனங்கள் எளிதாக அந்த பகுதிகளுக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் செய்யப்பட்டுள்ளன.