sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

/

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு இலங்கை எதிர்ப்பு

23


UPDATED : டிச 16, 2024 11:27 PM

ADDED : டிச 16, 2024 11:25 PM

Google News

UPDATED : டிச 16, 2024 11:27 PM ADDED : டிச 16, 2024 11:25 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இலங்கை கடல் எல்லையில், தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும்படி, அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயகே, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று வலியுறுத்தினார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே, மூன்று நாள் அரசு முறைப்பயணமாக நேற்று முன்தினம் மாலை புதுடில்லி வந்து சேர்ந்தார். அதிபராக பதவி ஏற்ற பின், முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார்.

ஒப்பந்தங்கள்


பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அனுரா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் பின், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா - இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்.

கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, 'சைபர்' பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வலுப்பெறும்.

இலங்கைக்கு 45,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கவும், எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பிராந்திய பல்கலை மாணவர்கள் 200 பேருக்கு, அடுத்த ஆண்டு முதல் மாதாந்திர கல்வி உதவித்தொகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 1,500 குடிமை பணியாளர் களுக்கு, இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அரசுத் துறைகளை 'டிஜிட்டல்' மயமாக்கியதில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளதை, அதிபர் திசநாயகே குறிப்பிட்டு பாராட்டினார். அதே போல, இலங்கையிலும் அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்க இந்தியாவின் உதவியை அவர் கோரியுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்து தலைவர்கள் விவாதித்த நிலையில், அந்நாட்டின் தமிழ் சிறுபான்மையினரின் நலன்களையும், விருப்பங்களையும் அரசு பூர்த்தி செய்யும் என நம்புவதாக மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இலங்கையின் நீர்நிலைகள் உட்பட எந்த பகுதியையும் பிற நாடுகள் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுருக்குமடி வலை


இந்த சந்திப்பின் போது, இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடியிடம், அதிபர் திசநாயகே கவலை தெரிவித்தார்.

இந்த போக்கு, கடல் சுற்றுச்சூழலை பாதிப்பதாகவும், கடல் வாழ் உயிரினங்கள் நாளடைவில் அழிந்துவிடும் அபாயம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்துக்கு, இரு நாடுகளும் சேர்ந்து நீடித்த மற்றும் நிலையான தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மோடியிடம் வலியுறுத்தினார்.

கப்பல் சேவை


தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுகவும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் தலைமன்னார் வரை விரைவில் படகு போக்குவரத்து துவங்க உள்ளதாக பிரதமர் அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடல் பகுதியிலும், துறைமுகங்களிலும் ஆய்வு என்ற பெயரில் சீனாவின் உளவு கப்பல்கள் நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இதற்கு, இலங்கையிடம் மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக, இலங்கையின் எந்த பகுதியையும் பிற நாடுகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நேற்றைய சந்திப்பின் போது, இலங்கை வரும்படி பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டு அதிபர் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் பேச்சு நடத்தியதை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சுருக்குமடி வலை என்றால் என்ன?

சுருக்கு பை போன்ற வட்ட வடிவில் இருப்பதால் இது சுருக்குமடி வலை என்று அழைக்கப்படுகிறது. இது கடலின் அடியில், 500 அடி ஆழம் வரை செல்லும். இது, சிறிய வகை மீன் குஞ்சுகள், முட்டைகள் முதல், பெரிய மீன்கள் வரை வாரி சுருட்டிவிடும் என்பதால், மீன்வளம் குறையும் அபாயம் உள்ளது.பாரம்பரிய மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, சுருக்குமடி வலை பயன்படுத்த தமிழக அரசு, 2007ல் தடை விதித்தது. இந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் 2018ல் உறுதி செய்தது.








      Dinamalar
      Follow us