விஜயேந்திராவுக்கு அனுபவம் இல்லை என்கிறார் ஸ்ரீராமுலு
விஜயேந்திராவுக்கு அனுபவம் இல்லை என்கிறார் ஸ்ரீராமுலு
ADDED : பிப் 05, 2025 09:37 PM

கோலார்; ''விஜயேந்திராவுக்கு போதிய அனுபவம் இல்லை. மாநில தலைவர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்,'' என, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விஜயேந்திராவை மாநி தலைவர் பதவியில் இருந்து மாற்றும்படி, நான் வலியுறுத்தவில்லை. ஆனால், அவர் அனுபவம் இல்லாதவர். என்னை மாநில தலைவராக தேர்வு செய்யும்படி, மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், ஆலோசனை கூறியுள்ளார். அவருக்கு நன்றி.
நான் கட்சிக்கு ஆதரவாக நிற்கிறேன். எந்த கோஷ்டியிலும் நான் இல்லை. கர்நாடகாவில் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். விஜயேந்திரா அனுபவம் இல்லாதவர். ஆனால் இவரை எடியூரப்பா, மாநில தலைவராக்கினார்.
எனக்கு பொறுப்பு கொடுத்தால், கட்சியில் எந்த குழப்பங்களும் இல்லாமல் பார்த்து கொள்வேன். 150 தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற செய்வேன்.
விஜயேந்திரா என் சகோதரர் போன்றவர். நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
எடியூரப்பா பா.ஜ.,வில், தென்னகத்தின் பீஷ்மர் போன்றவர். கட்சியில் உள்ள குழப்பங்களை அவர் சரி செய்ய வேண்டும். நான் மாநில பா.ஜ., தலைவராக, எடியூரப்பாவின் ஒத்துழைப்பும் வேண்டும்.
கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், எங்களின் சில தலைவர்கள் டில்லிக்கு சென்றுள்ளனர். எடியூரப்பா மாநில தலைவராக இருந்த போது, யாரும் வாயை திறந்தது இல்லை. நான் அரசியலில் வளர, அவரே காரணம். இன்றைய சூழ்நிலையில், மாநில தலைவராக தயாராக இருக்கிறேன். இது குறித்து, எடியூரப்பாவிடம் மன்றாடுவேன்.
நான் சத்தியம், தர்மத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறேன். நான் தோற்றாலும்,
மக்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர். நான் நல்லவன் என்பதால், காங்கிரசுக்கு என்னை அழைக்கின்றனர்.
முதல்வர் மாற்றம் என்பது, காங்கிரசின் சொந்த விஷயம். இதை பற்றி நான் பதிலளிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், மக்களுக்கு உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.