ADDED : அக் 25, 2024 10:54 PM

பெங்களூரு: பெங்களூரு மக்களை வாட்டி வதைத்த மழை நின்றுள்ளது. ஆனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரின் பல்வேறு மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, தொடர் மழை பெய்தது. கோரமங்களா, கே.ஆர்.புரம், எலக்ட்ரானிக் சிட்டி, ஜக்கூர், சிவராம் காரந்த் லே - அவுட் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. சாக்கடைகள் நிரம்பி, வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் பரிதவித்தனர். மழை தற்போது நின்றுள்ளது; வெள்ளம் வடிகிறது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஆனால், காலி மனைகள், சாக்கடைகளில் நீர் தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தொற்றுநோய்கள் பரவுமோ என, மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா என, பல தொற்றுநோய்கள் பரவல் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. இது நோய்களுக்கு வழி வகுக்கும். கொசுக்களை ஒழித்து, நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநகராட்சியிடம் மக்கள் வலியுறுத்துகின்றனர்.