UPDATED : ஜூலை 25, 2026 12:24 AM
ADDED : ஜூலை 25, 2026 12:22 AM

- நமது நிருபர் -
'நீட்' தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான போராட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டிக்காமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மவுனம் காத்தது, பேசுபொருளாகி உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, டில்லியில் பிரதமர் இல்லம் நோக்கி, எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தினர். பிரதமர் இல்லம் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராகுலை, டில்லி போலீசார் குண்டுகட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது, ராகுல் மூக்கில் ரத்தம் கசிந்தது.
தி.மு.க., வழக்கம்
வழக்கமாக, காங்கிரஸ் மற்றும் ராகுலுக்கு எதிராக, மத்திய பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்தால், முதலில் கண்டனம் தெரிவிப்பது தி.மு.க.,வின் வழக்கம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதோடு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசை ஆதரித்து, அமைச்சரவை யிலும் இடம்பெற்று விட்டது.
'இண்டி' கூட்டணியில் தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் அறிவிக்கவில்லை. ஆனால், 'மாநில நலனுக்காகவும், உரிமைக்காகவும், டில்லியில் தி.மு.க., தனித்து போராடும்' என, ஸ்டாலின் அறிவித்து விட்டார். எனவே, ராகுல் கைது செய்யப்பட்டதற்கு, ஸ்டாலின் மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
விஜய் கண்டனம்
அதே நேரத்தில், ராகுல் கைதுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி இல்லாவிட்டாலும், தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்க, தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் விரும்புகிறது.
ஆனால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்த கோபத்தில், தேசிய அரசியலில் தி.மு.க., தனித்து செயல்பட்டு வருவதாக விமர் சனம் எழுந்துள்ளது.
