UPDATED : அக் 01, 2026 12:59 PM
ADDED : அக் 01, 2026 10:20 AM
புதுடில்லி: நாட்டில் உள்ள சேமிப்பு கிடங்குகள் மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்களுக்கு தர நிர்ணயம், மதிப்பீட்டு முறைகளை உருவாக்க, மத்திய வர்த்தக அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதுகுறித்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச்செயலர் பங்கஜ் குமார் தெரிவித்ததாவது:
‘லாஜிஸ்டிக்ஸ்’ எனும் சரக்கு போக்குவரத்து துறையை நவீனமயமாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், உணவு வீணாவதை குறைக்க இந்த திட்டம் உதவும். நிறுவனங்கள் எளிதாக கடன் பெறவும் உதவும். மேலும், கிடங்குகள், குளிர்சாதன சேமிப்பு மையங்களின் தர நிர்ணயத்துடன் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்களுக்கான வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், மாநில அரசுகளுடன் இணைந்து நகர அளவில் லாஜிஸ்டிக்ஸ் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கிடங்குகள் மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள் இத்துறையின் நரம்பு மையங்களாக வலுவான வினியோகத்துக்கு ஆதாரமாக உள்ளன. இதனால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போட்டித்திறனை வலுப்படுத்த முடியும். உலகளாவிய வினியோக அமைப்பில் இடையூறுகள், இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கும் நிலையில் வலுவான லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகள் முக்கியமான ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
