ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பிப்.,27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பிப்.,27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 22, 2024 03:04 PM

புதுடில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை வரும் பிப்.,27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தமிழகத்தின் துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆலையை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஆலையை மூட, 2018ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், மீண்டும் ஆலையை இயக்க அனுமதி கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும், வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு வாதம்
இந்த வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‛‛ தமிழகம் ஒன்றும் குப்பை கிடங்கு அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தூத்துக்குடி பொருத்தமான இடமில்லை.
ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து தூத்துக்குடியில் இயங்க அனுமதித்தால் மீண்டும் மீட்க முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சீல் வைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலை என்பது எங்களுக்கு தேவையில்லை'' என வாதிடப்பட்டது.
பிப்.,27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ‛‛ ஒரு நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்தால் முதலில் அந்நிறுவனம் செய்த தவறை வெளிப்படையாக சுட்டிக்காட்ட வேண்டும். தவறு நடந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரை நிவர்த்தி செய்வோம் என்று நிர்வாகமும் இருக்கக் கூடாது''. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை வரும் பிப்.,27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.