திருடிட்டு வருந்தினால் சரியாகிடுமா? சித்தராமையா விவகாரத்தில் சிக்சர் அடித்த குமாரசாமி
திருடிட்டு வருந்தினால் சரியாகிடுமா? சித்தராமையா விவகாரத்தில் சிக்சர் அடித்த குமாரசாமி
ADDED : அக் 02, 2024 07:42 AM

புதுடில்லி: திருடிட்டு வருந்தினால் சரியாகிவிடுமா? என்று மூடா விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை குமாரசாமி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4000 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், மூடா மோசடி வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதியின் பெயரில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது. பெரும் சிக்கலை தொடர்ந்து, கணவர் தான் முக்கியம் என்று கூறி சித்தராமையா மனைவி பார்வதி தமக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளை திருப்பி தருவதாக அறிவித்தார்.
இந்நிலையில் திருடிவிட்டு, அதற்காக வருந்தினார் என்றால் எப்படி? அதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை என்று மத்திய அமைச்சர் குமாரசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:
மனைகளை திருப்பி தருவதாக அறிவித்த விஷயத்தில் முதல்வர் சித்தராமையா தாம் சிறந்த அரசியல் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் சித்தராமையா இவர்களில் யார் பொய்களை சொல்கின்றனர் என்று அனைவருக்கும் நன்றாக தெரியும்.
சித்தராமையா மீது மேலும் 2 வழக்குகள் உள்ளன. இப்போது அவர் தம்மை காக்க வேண்டும் என்று சாமுண்டீஸ்வரியை வணங்க அங்கு செல்வார். இவ்வாறு குமாரசாமி கூறி உள்ளார்.