மதுரை 'ஸ்பெஷல் ஜிகர்தண்டா' புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு
மதுரை 'ஸ்பெஷல் ஜிகர்தண்டா' புவிசார் குறியீடுக்காக காத்திருப்பு
ADDED : அக் 07, 2025 03:32 AM

சென்னை: மதுரையின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக மாறியுள்ள ஜிகர்தண்டாவுக்கு, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையமும், மதுரை ஜிகர்தண்டா சங்கமும் இணைந்து, மதுரை காமராஜர் பல்கலை காப்புரிமை மன்றத்தின் சார்பில், மதுரை ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறியதாவது:
தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது மதுரையின் உணவுகளில் பிரசித்தி பெற்ற ஜிகர்தண்டாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் .
மதுரை, கிழக்கு மாரட் சாலை அருகே, ஷேக்மீரான் என்பவரால், 1977ல், தள்ளுவண்டி கடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது நாடு முழுதும் பரவலாகி உள்ளது.
ஆனாலும், மதுரையில் அவரின் வாரிசுகளால் நடத்தப்படும் கடைகளில், 'கிரீம்' உள்ளிட்டவை பிரத்யேக சுவையுடன் உள்ளன. இதற்கான கொழுப்புச்சத்து நிறைந்த பால், எழுமலை, அலங்காநல்லுார் உள்ளிட்ட இடங்களில் பெறப்படுகிறது.
இந்த பாரம்பரிய உணவுக்கு புவிசார் குறியீடு பெற, கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில், மும்பையில் உள்ள அதிகாரிகள், இதன் சுவை, தரம், தயாரிப்பு முறைகளை ஆராய்ந்து சான்றிதழ் வழங்குவர். அதன்பின், அந்த உணவுப்பொருளுக்கான தரமதிப்பும், வணிகமும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.