ADDED : பிப் 05, 2025 09:45 PM
ஹாசன்; மர்ம கும்பலால் திருடப்பட்ட ஏ.டி.எம்., இயந்திரம், கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹாசன் நகரின், ஹனுமந்தபுராவில், வங்கி ஒன்றின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. ஜனவரி 29ம் தேதி நள்ளிரவு, மர்ம கும்பல் ஏ.டி.எம்., மையத்துக்குள் புகுந்தது. இயந்திரத்தை உடைக்க முயற்சித்தது. முடியாததால் இயந்திரத்தையே துாக்கி கொண்டு தப்பியோடினர்.
காலை பணம் எடுக்க வந்தவர்கள், ஏ.டி.எம்., இயந்திரம் திருடு போனதை கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஹாசன் ஊரக போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மர்ம கும்பலை கண்டுபிடிக்க முயற்சித்தனர். சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சிறிய தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சங்கரனஹள்ளி கிராமத்தின் அருகில் உள்ள கால்வாயில், நேற்று காலை ஏ.டி.எம்., இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கவனித்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து, கால்வாயில் இருந்து ஏ.டி.எம்., இயந்திரத்தை எடுத்தனர்.
மர்ம கும்பல் பணத்தை எடுத்து கொண்டு, இயந்திரத்தை கால்வாயில் வீசியுள்ளது. ஆனால் இதில் எவ்வளவு பணம் இருந்தது என, தெரியவில்லை.விசாரணை நடக்கிறது.