திருடப்பட்ட பத்ம ஸ்ரீ விருது 48 மணி நேரத்தில் மீட்பு
திருடப்பட்ட பத்ம ஸ்ரீ விருது 48 மணி நேரத்தில் மீட்பு
ADDED : ஆக 18, 2025 12:14 AM
கொல்கட்டா:மேற்கு வங்கத்தில் உள்ள முன்னாள் நீச்சல் வீராங்கனை வீட்டில் திருடப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை, 48 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். திருட்டு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு கொல்கட்டாவின் கஸ்பா பகுதியில் வசிப்பவர் பூலா சவுத்ரி; முன்னாள் நீச்சல் வீராங்கனை. இவர் கடந்த 2006 -2011ல் நந்தன்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ.,வாகவும் இருந்துள்ளார். பத்ம ஸ்ரீ, அர்ஜூனா உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது மூதாதையர் வீடு ஹூக்ளி மாவட்டம் ஹிண்ட் மோட்டார் என்ற பகுதியில் உள்ளது. அவர் வாங்கிய விருதுகள் மூதாதையர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அப்பகுதியில் வசிக்கும் தன் சகோதரர் மிலன் சவுத்ரிக்கு போன் செய்த பூலா சவுத்ரி, வீட்டை சுத்தம் செய்யும் படி கூறியுள்ளார்.
இதற்காக அங்கு சென்ற மிலன், மூதாதையர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பத்ம ஸ்ரீ உட்பட ஆறு பதக்கங்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தனது சகோதரிக்கும் போலீசாருக்கும் தெரிவித்தார். அதன்படி ஹூக்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் திருட்டு நடந்த 48 மணி நேரத்தில் வீராங்கனை வீட்டில் திருடிய நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருதை மீட்டனர். இந்நிலையில், விரைவாக நடவடிக்கை எடுத்து திருடு போன பதக்கங்களை மீட்ட போலீசாருக்கு பூலா சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.