ADDED : ஆக 18, 2025 12:15 AM
கைராகர்:சத்தீஸ்கரில், காதலியின் கணவரைக் கொல்ல வெடிகுண்டு பார்சல் அனுப்பிய நபரை மட்டுமின்றி, வெடிபொருள் கடத்தல் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரின் கைராகர் மாவட்டத்தில் உள்ள குசாமி கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் வினய் வர்மா, 20. தன் கல்லுாரி காலத்தில் ஒரு பெண்ணை இவர் ஒருதலைபட்சமாக காதலித்தார்.
திருமணம்
அந்தப் பெண்ணுக்கு, மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்சர் கான் என்பவருடன் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த வினய் வர்மா, அப்சர் கானை கொல்ல திட்டம் தீட்டினார். எலக்ட்ரீசியன் என்பதால், இரண்டு 'ஸ்பீக்கர்'களை வாங்கி, அதில் வெடிபொருட்களை வைத்து அப்சர் கானுக்கு அனுப்பி வைத்தார்.
தபால் வாயிலாக அனுப்பியது போல் இருப்பதாக காட்டுவதற்காக, போலி தபால்துறை முத்திரையை பயன்படுத்தி, நண்பர் ஒருவர் மூலம் அதை அப்சர் கானுக்கு வினய் வர்மா அனுப்பி வைத்தார்.
பார்சலை பார்த்ததுமே சந்தேகம் அடைந்த அப்சர், அதை பிரிக்காமல் போலீசாருக்கு தெரியப்படுத்தினார். அவர்களும், சம்பவ இடத்துக்கு வந்த மோப்பநாய் உதவியுடன் பார்சலை சோதித்தனர்.
இதில், பார்சலில் 2 கிலோ வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறையான சோதனையில், ஸ்பீக்கருடன் ஜெலட்டின் குச்சிகள் இணைக்கப்பட்டு, சுவிட்ச் போட்டதும், அவை வெடிப்பது போல் தயாரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
60 ஜெலட்டின் குச்சிகள்
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வெடிகுண்டு பார்சல் அனுப்பிய வினய் வர்மாவை முதலில் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில், ஜெலட்டின் குச்சியை வாங்கி தந்தவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 60 ஜெலட்டின் குச்சிகள், இரு டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.