ADDED : பிப் 01, 2024 12:52 AM

மால்டா, மேற்கு வங்கத்தில், 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யின் போது, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பயணித்த கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதை அக்கட்சி மறுத்துள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில், காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரை சமீபத்தில் மேற்கு வங்கத்தை அடைந்தது. பின், பீஹாரை அடைந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நேற்று மீண்டும் மேற்கு வங்கத்திற்கு வந்தது.
பீஹாரின் கதிஹாரில் இருந்து, மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிச்சந்திராபூர் என்ற பகுதியில் நேற்று யாத்திரை நுழைந்தது.
அப்போது, ராகுல் பயணித்த கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய தாகவும், காரின் பின்பக்க கண்ணாடி உடைந்ததாகவும் தகவல் வெளியானது.
மேற்கு வங்க காங்., தலைவரும், லோக்சபா காங்., தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் இதை உறுதிப்படுத்தும் வகையில் பேட்டி அளித்துஇருந்தார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ''ராகுல் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆனால் இத்தாக்குதல், எங்கள் மாநிலத்தில் நடக்கவில்லை; பீஹாரின் கதிஹாரில் நடந்தது,'' என்றார்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு வேறு மாதிரி விளக்கம் அளித்து, காங்., வெளியிட்ட பதிவு:
மேற்கு வங்கத்தின் மால்டாவில் ராகுலை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுலை பார்க்க, அவரது கார் முன் வந்தார்.
அப்போது திடீரென, 'பிரேக்' போடப்பட்டதில், பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ராகுல் நீதி கேட்டு போராடி வருகிறார். அவருக்கு பாதுகாப்பாக பொது மக்கள் உள்ளனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.