ADDED : ஜன 19, 2025 12:40 AM
புதுடில்லி, டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால், தான் போட்டியிட உள்ள புதுடில்லி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது கெஜ்ரிவாலை குறிவைத்து, அவர் சென்ற கருப்பு நிற சொகுசு காரின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
உடனே, அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்து கெஜ்ரிவால் சென்ற காரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு பா.ஜ.,வினர் தான் காரணம் என, ஆம் ஆத்மியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.