கரை கடந்தது அதிகாலையில் ஒடிசாவில் 'டானா' புயல்: உயிர் இழப்பை தடுத்த அரசின் சாதனை
கரை கடந்தது அதிகாலையில் ஒடிசாவில் 'டானா' புயல்: உயிர் இழப்பை தடுத்த அரசின் சாதனை
UPDATED : அக் 26, 2024 12:38 AM
ADDED : அக் 25, 2024 11:58 PM

புவனேஸ்வர்:'டானா' புயல் நேற்று ஒடிசாவில் கரையை கடந்தது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், கடலோரங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்ததால், உயிர் சேதம் ஏற்படவில்லை.
வங்கக் கடலில் உருவான டானா புயலால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் பிடர்கனிகா - தாம்ரா நகரங்கள் இடையே புயல் நேற்று காலை கரையை கடந்தது.
'நள்ளிரவு 12:05 மணிக்கு துவங்கி, காலை 8:30 மணிக்கு கரையை கடந்தது டானா புயல். முழுவதுமாக கரை கடக்க எட்டு மணி நேரம் பிடித்தது' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின் கம்பங்களும் விழுந்தன. மாநில அரசு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
பாதிப்பு நேரலாம் என வானிலை மையம் எச்சரித்திருந்த அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரயில், விமான சேவை நிறுத்தப்பட்டது. பத்து லட்சம் பேர் வரையில் வீடுகளில் இருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தது.
புவனேஸ்வரில் கள நிலவரத்தை ஆய்வு செய்த முதல்வர் மோகன் சரண் மஜி, ''மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படைகளைச் சேர்ந்த 385 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
''அரசின் 'ஜீரோ உயிரிழப்பு' என்ற திட்டத்தின்படி, மிக விரிவான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, டானா புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இது அரசின் சாதனை.
''சாய்ந்த மரங்களை உள்ளாட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சேதமடைந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும்,'' என்றார். ரயில், விமான சேவைகளும் படிப்படியாக துவங்கின.
மேற்கு வங்கம்
டானா புயலால், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், புர்பா மேதினிபூர், கோல்கட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
முதல்வர் மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள தலைமை செயலகத்தில் இரவு முழுதும் தங்கி புயல் நிலைமையை கண்காணித்தார்.
''தாழ்வான பகுதிகளில் இருந்து 2.16 லட்சம் பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன,'' என்று மம்தா கூறினார்.