இந்திய தொழில்நுட்பத்தால் பெருகும் ஆயுதப்படைகளின் பலம்: ராஜ்நாத்
இந்திய தொழில்நுட்பத்தால் பெருகும் ஆயுதப்படைகளின் பலம்: ராஜ்நாத்
ADDED : அக் 03, 2025 10:03 PM

ஹைதராபாத்: '' இந்திய தொழில்நுட்பத்தால், நமது ஆயுதப்படைகள் பலம் பெற்று வருகின்றன,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கொள்கையுடன், இந்தியா வலிமையான மற்றும் துடிப்பான பாதுகாப்பு தொழில்துறையை கட்டமைத்து வருகிறது. ஒரு காலத்தில் நமது நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாடுகளை சார்ந்துஇருந்தோம். ஆனால், இன்று நிலைமை மாறி வருகிறது. தற்போது, ஒவ்வொரு சாதனமும், ஆயுதமும், தளவாடங்களிலும் 'மேட் இன் இந்தியா' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
கடந்த மாதம் 97 இலகு ரக தேஜஸ் போர் விமானம் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இதில் பொருத்தப்படும் 64 சதவீத சாதனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். தேஜஸ் போர் விமானம், ஆகாஸ் ஏவுகணை, அர்ஜூன் பீரங்கி, உள்ளிட்டவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவையாக உள்ளன. இந்தியர்களின் தயாரிக்கும் தொழில்நுட்பம் மூலம் நமது ஆயுதப்படைகள் பலம் பெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.