ADDED : நவ 05, 2024 12:07 AM
புதுடில்லி: மஹாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல், வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 13 மற்றும் 20ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.
நாடு முழுதும் 48 சட்டசபை தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கும் வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், உத்தரகண்டில் உள்ள சட்டசபை தொகுதிக்கும் வரும், 20ல் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இங்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அது, 20ம் தேதிக்கு மாற்றப்படுவதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
உள்ளூர் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஓட்டுப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என, அரசியல் கட்சியினர் வைத்த வேண்டுகோளை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.