ADDED : ஜன 09, 2025 06:43 AM

கதக்: பதவி ஏற்று ஆறு மாதங்களே ஆன நிலையில், கதக் கலெக்டர் கோவிந்த ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டார்.
கதக் கலெக்டராக கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி கோவிந்த ரெட்டி பொறுப்பு ஏற்றார். நேற்று திடீரென அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கதக் கலெக்டராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை அரசு நியமித்துள்ளது. பதவியேற்று ஆறு மாதங்களில் கோவிந்த ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
கதக் - பெட்டகேரி நகராட்சி நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்து வந்தன. இடைத்தரகர்கள் தொல்லையும் அதிகமாக இருந்தது. கோவிந்தா ரெட்டி பொறுப்பேற்றதும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சரியாக பணி செய்யாத அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
எந்தப் பணியாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் இருந்தால்தான் அதற்கு அவர் அனுமதி அளித்து வந்தார். செல்வாக்குமிக்க மக்கள் பிரதிநிதிகள் சொன்னாலும், சட்டத்திற்கு புறம்பாக அவர் எதுவும் செய்ததில்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார். இதன் பின்னணியில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

