என்னை அலைக்கழித்தார் சுதாகர் காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் 'பகீர்'
என்னை அலைக்கழித்தார் சுதாகர் காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் 'பகீர்'
ADDED : ஜன 02, 2025 06:20 AM

சிக்கபல்லாபூர்: ''அமைச்சராக இருந்தபோது, பா.ஜ., - எம்.பி., சுதாகர் கூறியதன்பேரில், என்னை போலீசார் ஜீப்பில் ஏற்றி அலைக்கழித்தனர்,'' என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் பகீர் தகவல் கூறி உள்ளார்.
சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது, சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு உள்ளது. ஒரு கட்சிக்கு மாநிலத் தலைவராக இருக்கவே அவர் தகுதியற்றவர். ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை வழக்கில், அமைச்சர் பிரியங்க் கார்கேயை ராஜினாமா செய்ய சொல்ல, விஜயேந்திராவுக்கு அருகதை இல்லை.
பா.ஜ., ஆட்சியில் நடந்த எஸ்.ஐ., தேர்வு முறைகேடு, கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் பற்றி, பிரியங்க் கார்கே ஆவணம் வெளியிட்டதால் அவரை, பா.ஜ., தலைவர்கள் 'குறி'வைக்கின்றனர்.
அனைத்து அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பிரியங்க் கார்கேவுக்கு ஆதரவாக உள்ளோம். கான்ட்ராக்டர் சச்சின் எழுதிய தற்கொலை கடிதத்தில், அமைச்சரின் பெயர் இல்லை. எதற்காக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்?
தன் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படி அரசிடம், விஜயேந்திரா முதலில் கேட்கட்டும். பின், ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கை, நாங்கள் சி.பி.ஐ.,யிடம் கொடுக்கிறோம்.
ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலையில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு நேரடி தொடர்பு இருந்தது, அந்த கட்சியினர் அனைவருக்கும் தெரியும். ஈஸ்வரப்பாவிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க நினைத்தனர். ஒப்பந்ததாரர் வழக்கில் சிக்கியதும், பதவியை பறித்தனர். குற்றமற்றவர் என 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
விஜயேந்திரா சொல்வதை அவரது கட்சியினர் கேட்பது இல்லை. நான் பா.ஜ., தலைவராக இருந்திருந்தால், பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது எப்போதோ நடவடிக்கை எடுத்து இருப்பேன்.
பா.ஜ., - எம்.எல்.சி., ரவி நன்றாக உள்ளார். அவருக்கு உயிருக்கு எதுவும் ஆகவில்லை. இனிமேலும் ஆகாது. பாதுகாப்பு கருதி தான் அவரை வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மையை, இப்போது சொல்கிறேன். சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர், அமைச்சராக இருந்தபோது, அவருக்கு எதிராக பேசினேன். இதனால் சுதாகர் உத்தரவின்பேரில் போலீசார், என்னை ஜீப்பில் ஏற்றிச் சென்று அலைக்கழித்தனர்; குடிக்க தண்ணீர் கூட தரவில்லை. ஆனால் ரவியை, போலீசார் நல்லவிதத்தில் நடத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.