மீண்டும் காங்.,கில் சேர சுதாகர் திட்டம்? முதல்வரை பாராட்டி பேசிய பின்னணி!
மீண்டும் காங்.,கில் சேர சுதாகர் திட்டம்? முதல்வரை பாராட்டி பேசிய பின்னணி!
ADDED : பிப் 05, 2025 06:47 AM

சிக்கபல்லாபூர்: துணை முதல்வர் சிவகுமார் மூலம் மீண்டும் காங்கிரஸ் பக்கம் வருவதற்கு, சிக்கபல்லாபூர் பா.ஜ., -- எம்.பி., சுதாகர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிக்கபல்லாபூர் பா.ஜ., -- எம்.பி., சுதாகர். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். காங்கிரஸ் -ம.ஜ.த., கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் பா.ஜ.,வுக்கு சென்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சுகாதார அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., தலைவராக, சந்தீப் ரெட்டி சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தில் சுதாகர் கடும் கோபம் அடைந்தார். தன்னிடம் ஆலோசிக்காமல் மாவட்ட தலைவரை நியமித்ததாக விஜயேந்திராவை கடுமையாக சாடினார். இதனால், இருவருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.
'இனி சமரசமாக செல்ல மாட்டேன்; யுத்தத்திற்கு தயார்' என்றும் சுதாகர் அறிவித்தார். 'அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவை எடுப்பேன்' என்றும் கூறியிருந்தார்.இதன் மூலம் அவர் மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்கிறாரா என்று பேச்சு அடிபட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுதாகரின் செயல்பாடுகள் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சிக்கபல்லாபூர் ஓசூர் கிராமத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வரை, சுதாகர் பாராட்டி பேசினார்.
'முதல் முறை முதல்வர் ஆனபோது சித்தராமையா எப்படி இருந்தாரோ அதேபோன்று தற்போதும் உள்ளார். அவர் மிகவும் நல்ல மனிதர். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிறைய பாடுபட்டுள்ளார்' என்று பாராட்டு மழை பொழிந்தார்.
மேலும் தனது சமூகத்தை சேர்ந்த துணை முதல்வர் சிவகுமாருடனும், சுதாகருக்கு நல்லுறவு உள்ளது. இதனால் சிவகுமார் மூலம் மீண்டும் காங்கிரஸ் பக்கம் வருவதற்கு சுதாகர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், மீண்டும் சுதாகரை கட்சியில் சேர்க்க கூடாது என்று, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவரை முதல்வர் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், 'சுதாகர் பா.ஜ., வை விட்டு விலக மாட்டார். எம்.பி.,யாக இருக்கும் அவருக்கு மேலிட தலைவர்களிடம் நல்ல பெயர் உள்ளது. சில பார்லிமென்ட் குழுக்களின் உறுப்பினராகவும் உள்ளார். இதனால், அவர் கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை' என்றும், பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.