ADDED : ஜன 10, 2025 11:15 PM

சர்க்கரை வள்ளி கிழங்கு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கிழங்கை நன்கு வேகவைத்து காலை உணவாகவும், ஸ்நாக்ஸ் ஆகவும் எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். இது தவிர சர்க்கரை வள்ளி கிழங்கில் பெரிதாக வேறு 'டிஷ்' எதுவும் யாரும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த கிழங்கில் அல்வா செய்யலாம். என்னது சர்க்கரை வள்ளி கிழங்குல அல்வாவான்னு ஆச்சரியமா இருக்கலாம். ஆமாம், வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
செய்முறை:
சர்க்கரை வள்ளி கிழங்கை 15 நிமிடம் நன்கு வேக வைத்து, தோல் உரித்து விடவும். அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் நாட்டு சர்க்கரை போட்டு, கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து, மிதமான சூட்டில் அடுப்பில் வைக்கவும். மிக்சியில் அரைத்து எடுத்து வைத்திருந்த சர்க்கரை வள்ளி கிழங்கு விழுதை, வாணலியில் போட்டு, அதனுடன் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கலந்த பின், நெய் ஊற்றி அடுப்பில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்னொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து, அதையும் சர்க்கரைவள்ளி கிழங்கு விழுதுடன் சேர்க்கவும். நெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி வேக வைத்து இறக்கினால், சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா தயார்.
உங்கள் வீட்டில் கண்டிப்பாக ஒருமுறை இந்த அல்வாவை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக இனிப்பு அதிகம் சாப்பிடும் குழந்தைகள், இந்த அல்வாவை 'என்ஜாய்' செய்து சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை வள்ளி கிழங்கு - மூன்று
* நாட்டு சர்க்கரை - ஒரு கப்
* ஏலக்காய் பவுடர் - ஒரு டீஸ்பூன்
* முந்திரி பருப்பு - 15
* நெய் - கால் கப்