ADDED : டிச 03, 2024 02:27 AM

சண்டிகர், பஞ்சாபில் 2007 - 2017 வரை சிரோண்மணி அகாலி தளம் ஆட்சி நடந்தது. அப்போது, மறைந்த பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தார்.
இவரது மகன், சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராக பதவி வகித்தார். 2007ல், தேரா சச்தா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், சீக்கிய குருக்களைப் போல உடை அணிந்து ஒரு விழாவை நடத்தினார்.
அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு மன்னிப்பு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
சீக்கியர்களின் உயர்ந்த அமைப்பான அகல் தக்த், இது குறித்து விசாரணை நடத்தியது.
விசாரணையில், தவறை சுக்பிர் சிங் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில், சுக்பிர் சிங் பாதலுக்கு, அகல் தக்த் தண்டனை விதித்துள்ளது.
இதன்படி, அமிர்தசரஸ் பொற்கோவில் உட்பட பல குருத்வாராக்களின் சமையலறை, குளியல் அறை, கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும்படி, அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.