பல முறை சம்மன்: பல நாள் கெடு: "பிடி" கொடுக்காத கெஜ்ரிவால்
பல முறை சம்மன்: பல நாள் கெடு: "பிடி" கொடுக்காத கெஜ்ரிவால்
UPDATED : மார் 17, 2024 11:55 AM
ADDED : மார் 17, 2024 10:50 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 9வது முறையாக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றார். இதுவரை 8 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார்.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார். இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தன் வழக்கறிஞர்களுடன் கெஜ்ரிவால் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் கெஜ்ரிவால் கொண்டாட்டத்தில் இருந்தார்.
விடாத அமலாக்கத்துறை
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இன்று (மார்ச் 17) 9 முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சம்மனில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
சட்டவளையம்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், திஹார் சிறையில் நீண்ட காலமாக முன்னாள் டில்லி முதல்வர் மணிஷ் சிசோடியோ சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக அமலாக்கத்துறையினர் நம்புகின்றனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கெஜ்ரிவாலை சட்டவளையத்திற்கு கொண்டு வர வேண்டும் என அமலாக்கத்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

