ADDED : நவ 08, 2025 02:11 AM

புதுடில்லி: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து இந்தியாவின் சுனில் செத்ரி, மீண்டும் ஓய்வு அறிவித்தார்.
இந்திய கால்பந்து வீரர் சுனில் செத்ரி 41. கடந்த 2005ல் அறிமுகமான இவர், அதிக போட்டிகளில்(157) பங்கேற்ற, அதிக கோல் (95) அடித்த இந்திய வீரரானார்.
சர்வதேச போட்டியில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த ஒரே இந்திய வீரர் செத்ரி. சர்வதேச அரங்கில் 11 முறை இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த சுனில் செத்ரி, பயிற்சியாளரின் வேண்டுகோளுக்காக தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார். ஆசிய கோப்பை (2027) தகுதிச் சுற்றில் பங்கேற்ற இவர், 6 போட்டியில், ஒரு கோல் மட்டும் அடித்தார். தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்தியா, ஆசிய கோப்பை பிரதான சுற்றுக்கு தகுதி பெறத்தவறியது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வங்கதேசத்துக்கு எதிரான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணியில் சுனில் செத்ரி இடம் பெறவில்லை.
இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில், ''ஆசிய கோப்பைக்கு இந்திய அணியை தகுதி பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே மீண்டும் விளையாடினேன். ஆனால் அது நடக்காமல் போனது ஏமாற்றம். தகுதிச் சுற்று இல்லையென்றால் நான் வந்திருக்க மாட்டேன்.
பிரதான சுற்றுக்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியானதால், எனது ஓய்வு முடிவை பயிற்சியாளரிடம் தெரிவித்தேன். அதனை அவர் புரிந்துகொண்டார். ஐ.எஸ்.எல்., தொடருடன் ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் இருந்து விடை பெற திட்டமிட்டுள்ளேன். அடுத்த சீசனில் 15 கோல் அடித்து ஓய்வு பெற விரும்புகிறேன்,'' என்றார்.

