ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
UPDATED : மே 10, 2025 06:41 PM
ADDED : மே 10, 2025 12:30 PM

சண்டிகர்: பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர்.
நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும் பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, 'டெரிடோரியல் ஆர்மி' எனப்படும் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. இந்த பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான முழு அதிகாரத்தை நம் ராணுவ தளபதிக்கு வழங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவ தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். தன்னார்வலர்கள் தேவை என்ற அறிவிப்பை தொடர்ந்து ''ராணுவத்திற்கு உதவ தயார்'' என முழக்கமிட்டு சண்டிகரில் இளைஞர்கள், இளம்பெண்கள் குவிந்தனர்.
''நாங்கள் நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறோம். ராணுவத்திற்கு உதவியாக, தன்னார்வலர்களாக பணியாற்ற தயாராக இருக்கிறோம்'' என குவிந்த இளைஞர்களில் ஒருவர் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்ததை தொடர்ந்து, காலை 6 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் நீண்ட நேரமாக காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். கூடியிருந்த இளைஞர்கள் அனைவரும், எதையும் கண்டுக்கொள்ளாமல் தேசத்திற்காக பணியாற்ற நாங்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.