விவசாயிகளை மறந்து விட்டு கூட்டாளிகளுக்கு ஆதரவா?: அகிலேஷ் கோபம்
விவசாயிகளை மறந்து விட்டு கூட்டாளிகளுக்கு ஆதரவா?: அகிலேஷ் கோபம்
ADDED : ஜூலை 24, 2024 01:03 PM

புதுடில்லி: 'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்காமல், கூட்டாளிகளுக்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது நிருபர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: நாங்கள் அனைவரும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தோம். ஆனால் இங்கு விவசாயிகளைக் காட்டிலும், பா.ஜ., அரசு தனது கூட்டாளிகளுக்கு அதிக நிதி கொடுத்துள்ளது.
பணவீக்கம்
இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அவர்கள் இன்டர்ன்ஷிப் முடிந்த பிறகு என்ன செய்வார்கள்?. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு நீங்கள் சில சலுகைகளை அளித்தாலும், பணவீக்கம் காரணமாக நீங்கள் அதை திரும்பப் பெறுகிறீர்கள். பட்ஜெட்டில் உத்தரபிரதேசத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை. மத்திய பட்ஜெட் வெறும் நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.