'சீட்' கிடைக்காத பா.ஜ., - எம்.பி.,க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்!: கொப்பாலில் பா.ஜ., ஆபீஸ் கண்ணாடி உடைப்பால் பதற்றம்
'சீட்' கிடைக்காத பா.ஜ., - எம்.பி.,க்களின் ஆதரவாளர்கள் போராட்டம்!: கொப்பாலில் பா.ஜ., ஆபீஸ் கண்ணாடி உடைப்பால் பதற்றம்
ADDED : மார் 14, 2024 11:11 PM

கொப்பால்: லோக்சபா தேர்தலில், 'சீட்' கிடைக்காத பா.ஜ., - எம்.பி.,க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., - எம்.பி., கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள், கொப்பாலில் உள்ள பா.ஜ., அலுவலகத்தின், கண்ணாடியை உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி பெற, பா.ஜ., திட்டம் வகுத்து உள்ளது. வயதான எம்.பி.,க்களுக்கு பதில், புதுமுகங்களுக்கு சீட் தரப்படலாம் என்று, கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டது. இதனால் சிட்டிங் எம்.பி.,க்கள் மீண்டும் சீட் பெறுவதற்கு முயற்சி எடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பா.ஜ., வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், சிட்டிங் எம்.பி.,க்கள் நளின்குமார் கட்டீல், பிரதாப் சிம்ஹா, கரடி சங்கண்ணா, தேவேந்திரப்பா, சதானந்த கவுடா, சிவகுமார் உதாசி, பசவராஜ், சீனிவாஸ் பிரசாத், சித்தேஸ்வருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
கோபமான எம்.எல்.சி.,
சித்தேஸ்வருக்கு பதிலாக அவரது மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற எட்டு எம்.பி.,க்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, சீட் கொடுக்கப்படவில்லை. சீட் மறுக்கப்பட்டதால் கரடி சங்கண்ணா, தேவேந்திரப்பாவின் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொப்பாலில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு சென்ற, கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள், கொப்பால் மாவட்ட பா.ஜ., தலைவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலக கண்ணாடிகள் மீது கல்வீசினர். இதில் கண்ணாடி சுக்குநுாறாக நொறுங்கியது. அங்கு இருந்த பாரத மாதா புகைப்படத்தின் கண்ணாடியை உடைத்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, பா.ஜ., - எம்.எல்.சி., ஹேமலதா நாயக், கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. எம்.பி.,யின் ஆதரவாளர் ஒருவர், ஹேமலதா நாயக்கிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனால் கோபம் அடைந்த ஹேமலதா நாயக், 'என்னை கேட்க நீ யார், அதிகமாக பேசினால் செருப்பால் அடிப்பேன்' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அங்கு சென்ற போலீசார், எம்.பி.,யின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இதற்கிடையில், கொப்பாலில் உள்ள கரடி சங்கண்ணா வீட்டிற்கு, கொப்பால் பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடார் நேற்று மதியம் வந்தார். கரடி சங்கண்ணாவின் காலில் விழுந்து, தன்னை ஆசிர்வதிக்கும்படி கேட்டு கொண்டார்.
அவரை அரை மனதுடன் கரடி சங்கண்ணா வாழ்த்தி அனுப்பினார். பசவராஜ் வெளியே வந்ததும், அங்கு கூடி நின்ற கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள், 'நீ எதற்கு இங்கு வந்தாய். கொப்பாலில் உனது தோல்வி உறுதி' என்று கோஷம் எழுப்பினர்.
இதுபோல தேவேந்திரப்பாவின் ஆதரவாளர்கள், பல்லாரியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு எம்.பி.,க்களின் ஆதரவாளர்களும், தங்களது தலைவர்களுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தாவணகெரேயில் சிட்டிங் எம்.பி., சித்தேஸ்வர் மனைவி காயத்ரிக்கு சீட் கொடுத்து இருப்பதற்கும், எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தாவணகெரேவில் முன்னாள் எம்.எல்.ஏ., ரவீந்திரநாத் சீட் பெற முயற்சி செய்தார். அவருக்கு கிடைக்கவில்லை. நேற்று மதியம் ரவீந்திரநாத் வீட்டின் முன்பு கூடிய, அவரது ஆதரவாளர்கள் விஜயேந்திராவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அவருடன் வந்த சக தொண்டர்கள் தடுத்து, அவரை மீட்டனர். மற்ற எம்.பி.,க்களின் ஆதரவாளர்கள், பெரிய அளவில் போராட்டம் நடத்தாமல், சமூக வலைதளம் மூலம், தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் கர்நாடக பா.ஜ.,வில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. சீட் கிடைக்காத சிட்டிங் எம்.பி.,க்களை சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தோளில் விழுந்து உள்ளது.

