ADDED : மார் 20, 2024 11:10 PM

புதுடில்லி, ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக, மாறி மாறி துணை குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது முறையல்ல என, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், அம்மாநில முதல்வராக இருந்த, ஜே.எம்.எம்., எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், ஹேமந்த் சோரனின் உதவியாளராக இருந்த பிரேம் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் மீண்டும் வந்தது.
அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
சட்டவிதிகளின்படி, ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அல்லது இறுதி குற்றப்பத்திரிகையை 60 - 90 நாட்களில் தாக்கல் செய்ய முடியாதபட்சத்தில், தானாக ஜாமின் வழங்கப்பட வேண்டும்.
இந்த நபர், 18 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறையில் இருப்பதற்காக, இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை என்று கூறி, மாறி மாறி துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது முறையல்ல.
நீங்கள் விசாரணையை முடிக்காததால், இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், ஒருவரை எந்தக் காலவரையும் இல்லாமல் தொடர்ந்து சிறையில் வைக்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

