சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக விசாரிப்பதா: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக விசாரிப்பதா: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ADDED : ஆக 05, 2025 11:33 PM

புதுடில்லி :சிவில் வழக்காக விசாரிக்க வேண்டிய வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றி விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் பிறப்பித்த உத்தரவு மிகவும் தவறானது எனவும் கடிந்து கொண்டது.
உ.பி.,யில், வழக்கு ஒன்றை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அதை சிவில் வழக்காக விசாரித்தால், வழக்கு தொடர்ந்தவருக்கு, எதிர் மனுதாரரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தர காலதாமதம் ஏற்படும் என்பதால், கிரிமினல் வழக்காக மாற்றி விசாரித்து தீர்ப்பும் அளித்தது.
வேறுபாடு
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு இடையே இருக்கும் நேர்த்தியான வேறுபாட்டை உயர் நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
மோசடி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மோசடிக்கான, அடிப்படை முகாந்திரம் என்னவென்பதை புரிந்து கொள்வது அவசியம்.
சிவில் வழக்காக விசாரணை நடத்தப்பட்டால், புகார்தாரர் பணத்தை திரும்ப பெற அதிக காலம் பிடிக்கும். இதற்காக வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றி விசாரித்து உத்தரவிடுவது என்பது மிகவும் தவறான செயல். உயர் நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்றிலும் விரோதமானது.
திரும்ப பெற வேண்டும்
இத்தகைய நீதி மீண்டும் வழங்கப்படவே கூடாது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும், அந்த நீதிபதி ஓய்வு பெறும் வரை, அவரிடம் விசாரணைக்காக எந்தவொரு கிரிமினல் வழக்குகளையும் ஒப்படைக்கக் கூடாது.
மேலும், சம்பந்தப்பட்ட அந்த நீதிபதி, இனி உயர் நீதிமன்றத்தின் அனுபவமிக்க நீதிபதி அடங்கிய டிவிஷன் அமர்வில் மட்டுமே அமர்ந்து வழக்குகளை விசாரிக்க வேண்டும்.
எந்த சூழலிலும், தனி நீதிபதியாக கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கக் கூடாது.
ஒரு வேளை, தனி நீதிபதியாக அவர் அமர வேண்டியிருந்தால், அவருக்கு கிரிமினல் வழக்குகள் அல்லாத வேறு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை மட்டுமே தர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.