கூடுதல் ஊழியர்களை நியமியுங்கள் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
கூடுதல் ஊழியர்களை நியமியுங்கள் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : டிச 05, 2025 03:14 AM
புதுடில்லி: 'எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருக்கும் பி.எல்.ஓ., எனும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க, கூடுதல் ஊழியர்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுதும் தமிழகம், கேரளா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் என, 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
பணிச்சுமை தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்படும் இப்பணியில், அந்தந்த மாநில அரசுகளின் ஊழியர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலு வலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஒருபுறம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மறுபுறம், பணிச்சுமை, அரசியல் அழுத்தங்கள், கொந்தளிக்கும் வாக்காளர்கள் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு, அந்தந்த மாநில தேர்தல் கமிஷனர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்காத ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடும்படி கோரப்பட்டு இருந்தது.
இம்மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதம்:
ஆசிரியர்கள் அல்லது அங்கன்வாடி ஊழியர்கள் தான் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
இடைநீக்கம் வழக்கமான ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு முன் அதிகாலையிலோ அல்லது வழக்கமான பணியை முடித்த பின் மாலையிலோ, தேர்தல் பணியை செய்கின்றனர். இதனால், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
இளைஞர் ஒருவர் தன் திருமணத்திற்காக விடுப்பு கேட்டும் தரப் படவில்லை. தேர்தல் பணி செய்ய முன்வராததால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், மனம் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் மீது குறைந்தபட்ச மனிதாபிமானமாவது காட்ட வேண்டும். மாறாக, கடமை தவறும் அலுவலர்கள் மீது தேர்தல் கமிஷன் சார்பில் கிரிமினல் நடவடிக்கை எடுப்பது வேதனை தருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்க வேண் டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் மணீந்தர் சிங் இருவரும், 'தமிழகத்தில், 90 சதவீத அளவுக்கு விண்ணப்பப் படிவங்கள் வினியோகிக்கும் பணி முடிந்துவிட்டன' என தெரிவித்தனர்.
'கடமை தவறும்போது மட்டுமே சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது' எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவு:
அரசு ஊழியர் தேர்தல் பணி செய்வது அவசியம். அதே சமயம் அவர்களுக்கு அதிகமான பணிச்சுமை தரக்கூடாது. தேர்தல் கமிஷனுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.
எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் பணிச்சுமையை குறைக்க, கூடுதல் ஊழியர்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். இதனால், பணிச்சுமையும், பணி நேரமும் கணிசமாக குறையும்.
நிவாரண உதவி குறிப்பிட்ட காரணங்களுக்காக எஸ்.ஐ.ஆர்., பணியில் இருந்து விடுவிக்குமாறு எந்தவொரு ஊழியராவது விலக்கு கேட்டால், அதை பரிசீலித்து அவரை மாநில அரசு விடுவிக்க வேண்டும்.
விலக்கு கோரும் ஊழியருக்கு பதிலாக வேறு ஒரு ஊழியரை எஸ்.ஐ.ஆர்., பணிக்கு நியமிக்க வேண்டும். மாற்று ஊழியருக்கு ஏற்பாடு செய்யாமல் இருக்கக்கூடாது.
உயிரிழந்த அலுவலர் களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் பின்னர் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

