உச்ச நீதிமன்றம் 'டோஸ்': ஜார்க்கண்ட் ஐகோர்ட் திடீர் வேகம்
உச்ச நீதிமன்றம் 'டோஸ்': ஜார்க்கண்ட் ஐகோர்ட் திடீர் வேகம்
ADDED : ஜூலை 27, 2025 11:39 PM

ராஞ்சி: தண்டனைக்கு எதிரான வழக்கில் முடிவு எடுக்காமல், பல ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் புகார் செய்த பின், ஒரு வாரத்திலேயே, 10 குற்றவாளிகள் மீதான வழக்குகளில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜார்க்கண்டில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், 'தண்டனைக்கு எதிரான வழக்கில், பல ஆண்டுகளாக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. விரைவில் முடிவு எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, கடந்த 14ல் விசாரணைக்கு வந்த போது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு, சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவுசியா ஷகில், தண்டனைக்கு எதிரான வழக்குகளில், வெவ்வேறு தேதிகளில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறினார்.
இந்த விபரங்களை பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது போன்ற வழக்குகளில் விரைந்து முடிவெடுக்கும்படி புதிதாக நியமிக்கப்பட்ட ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதி பதிக்கு அறிவுறுத்தினர்.
மேலும், தீர்ப்புக்காக பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அளிக்கும்படி, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்., 22க்கு ஒத்தி வைத்தனர்.