ADDED : அக் 12, 2025 02:33 AM

சென்னை: ஜாதியை ஒழிப்பதாக தி.மு.க., நாடகம் ஆடுவதாக பாமக அன்புமணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
‛ஜாதிகளை ஒழிக்க சிறந்த வழி என்ன என்று, ஆசிரியர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முட்டாள் மாணவன், 'அனைவர் ஜாதி சான்றிதழையும் வாங்கி, கிழித்து எறிந்து விடலாம். அப்படி செய்தால், யாரிடமும் ஜாதிக்கு சான்று இருக்காது' என கூறினானாம். ஜாதிகளை ஒழிக்கப்போவதாக, தி.மு.க., அரசு ஆணை வெளியிட்டிருப்பதும், அப்படித்தான் தோன்றுகிறது.
ஜாதியை அரசாணை பிறப்பித்து ஒழிக்க முடியாது. அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கினால் தான், ஜாதியை ஒழிக்க முடியும். எனவே, ஜாதியை ஒழிப்பதற்கான சிறந்த வழி, சமத்துவத்தை நோக்கி, சமூக நீதி பாதையில் பயணிப்பது தான். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க., அரசு, கிராம சபை கூட்டங்களில், ஜாதி பெயர்களை நீக்க தீர்மானங்களை இயற்றி, ஜாதிகளை ஒழிக்கப் போவதாக, நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.
தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்குவதாக அரசாணை வெளியிட்ட, மறுநாளே, கோவை பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை சூட்டியுள்ளனர். இப்படி இரட்டை வேடம் போடும் தி.மு.க., அரசு, ஜாதியை ஒழிக்கப்போவதாக நாடகங்களை நடத்தக்கூடாது.'
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.