/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரையில் மணல் மேடு அழிப்பு டுமீங்குப்பம் மீனவர்கள் கண்டனம்
/
கடற்கரையில் மணல் மேடு அழிப்பு டுமீங்குப்பம் மீனவர்கள் கண்டனம்
கடற்கரையில் மணல் மேடு அழிப்பு டுமீங்குப்பம் மீனவர்கள் கண்டனம்
கடற்கரையில் மணல் மேடு அழிப்பு டுமீங்குப்பம் மீனவர்கள் கண்டனம்
ADDED : அக் 12, 2025 02:21 AM

சென்னை:சென்னை, டுமீங்குப்பம் கடற்கரை பகுதியில், உரிய அனுமதியின்றி பொக்லைன் உதவியுடன், மணல் மேடுகளை அகற்றி, கற்களை புதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, அப்பகுதி மீனவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
நொச்சிக்குப்பம் அடுத்த டுமீங்குப்பம் பகுதியில், கடற்கரையின் இயற்கை அரணாக விளங்கக்கூடிய மணல் மேடுகளை சீரமைப்பு என்ற பெயரில், பொக்லைன் இயந்திரம் மூலம், அங்குள்ள பெரிய கற்களை, மணல் பரப்பில் பள்ளம் தோண்டி புதைக்கும் பணியில் நேற்று காலை சிலர் ஈடுபட்டனர்.
உரிய அனுமதி இல்லாமல், மணல் மேடுகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவதை அறிந்த அப்பகுதி மீனவர்கள், இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை.
இது குறித்து, அப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:
ஒரு காலத்தில் கடல் அரிப்பு மோசமாக இருந்தது. அப்போது, அலைகளை தடுக்க கல் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தற்போது, அந்த கற்களை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், மணல் பரப்பில் பள்ளம் தோண்டி மறைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், காற்று வீசுவதை தடுக்கும் விதமாக இயற்கையாக உருவான மணல் மேடுகளையும் அழிக்கின்றனர். நீர் மட்டமும், சாலை மட்டமும் சமமானால் ஆபத்து நேரிடும்.
நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிக காற்று வீசும். சென்னை வட்டார கடற்கரை பகுதிகளில், நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம் பகுதியில் தான் உயரமான மணல் மேடுகள் உள்ளன.
காற்று வேகமாக வீசினால், தடுக்கும் வகையில் அவை அமைந்துள்ளன. அவற்றை அழிப்பது ஏற்புடையதல்ல.
கடற்கரையில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுவிடம் அனுமதி பெறுவது அவசியம்.
கடற்கரையை அழகு படுத்தும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகள், அதனால் வரும் பாதிப்பை உணராமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற பணிகளில் ஈடுபடும்போது, மீனவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.