'அமலாக்கத் துறை வரம்பு மீறுகிறது': உச்ச நீதிமன்றம்
'அமலாக்கத் துறை வரம்பு மீறுகிறது': உச்ச நீதிமன்றம்
UPDATED : ஜூலை 22, 2025 03:48 AM
ADDED : ஜூலை 22, 2025 03:47 AM

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியோருக்கு சட்ட ஆலோசனை வழங்கிய மூத்த வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை வரம்பு மீறி செயல்படுவதாக கண்டிப்புடன் தெரிவித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார் மற்றும் பிரதாப் வேணுகோபாலுக்கு அமலாக்கத் துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது. இது வழக்கறிஞர்களின் சுதந்திரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போன்றது என புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வு தாமாக முன் வந்து விசாரித்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தேபோது, ''வழக்கறிஞர்களுக்கும் அவர்களது கட்சிக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது உரிமை அடிப்படையிலானது.
அப்படி இருக்கும்போது, கட்சிக்காரருக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக எப்படி சம்மன் அனுப்பலாம். அமலாக்கத்துறை வரம்பு மீறியிருப்பதால் வழிகாட்டுநெறிமுறைகள் வகுக்க வேண்டும்,'' என தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார்.
அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, 'சட்ட ஆலோசனைகள் வழங்கியதற்காக வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. பொய்யான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விசாரணை அமைப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்' என, வாதிட்டனர்.
இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'அமலாக்கத் துறை சம்மன் அனுப்புவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாக சட்ட ஆலோச னைகள் வழங்கியதற்காக சம்மன் அனுப்புவதெல்லாம் ஆபத்தான முன்னுதாரணமாகி விடும். இது தொடர்ந்தால் வருங்காலத்தில் வழக்கறிஞர்களால் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் சட்ட ஆலோசனைகள் வழங்க முடியாமல் போய்விடும்' என்றனர்.
மீண்டும் குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாக வைத்து இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக வாதிட்டார். எனவே, அந்த செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், ''டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்ப்பதில்லை. 'யு டியூப்' பேட்டிகளையும் காண்பதில்லை. கடந்த வாரம் சில திரைப்படங்களை மட்டுமே பார்த்தேன். அடிப்படையில் நாம் அனைவரும் வழக்கறிஞர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வழக்கறிஞர்கள் நலன் சார்ந்த விவகாரத்தில் முரண்பட்டு நிற்கக் கூடாது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன், மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் உள்பட இதில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, விரிவான பதிலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஜூன் 20ம் தேதி அமலாக்கத் துறை, அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என தெரிவித்திருந்தது.
அப்படி சம்மன் அனுப்ப வேண்டுமெனில் துறை தலைவரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தது.