டாக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டாக்டர் கொலை வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : ஜன 29, 2025 12:47 AM
புதுடில்லி:டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி, அரசு தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013ல், சொத்து தகராறில் நரம்பியல் டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அய்யப்பன் அப்ரூவராக மாறினார்.
இந்த வழக்கில் கடந்த 2015ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்கிய சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது.
இதில் பொன்னுசாமி, பேசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு துாக்கு தண்டனையும், மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்ரூவரான அய்யப்பன் அரசு சாட்சி என்பதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவர்களை விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பிலா எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை வழக்கின் விசாரணையின் போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததை அடுத்து, குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராகவும் உச்ச நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகி இருந்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கீழமை நீதிமன்றத்தின் ஆவணங்கள், அவற்றின் மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆறு வார காலத்திற்குள் அரசு தரப்பு சமர்ப்பிக்க வேண்டும்' என கூறி, விசாரணையை ஒத்தி வைத்தனர்.