பேச்சு சுதந்திரம் துஷ்பிரயோகம்: உச்ச நீதிமன்றம் வேதனை
பேச்சு சுதந்திரம் துஷ்பிரயோகம்: உச்ச நீதிமன்றம் வேதனை
ADDED : ஜூலை 15, 2025 06:10 AM

புதுடில்லி : கார்ட்டூனிஸ்ட், நகைச்சுவை நடிகர்களால் பேச்சு சுதந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாள்வியாவுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்து விட்டது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாள்வியா, 50, கொரோனா கால கட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை அவதுாறாக விமர்சித்து கார்ட்டூன் வரைந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஜோஷி என்பவர் அளித்த புகாரின்படி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, ம.பி., உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாள்வியா மனு தாக்கல் செய்தார்.
கடந்த 3ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுதன்ஷு துலியா, அரவிந்த் குமார் ஆகியோர், 'கார்ட்டூனிஸ்ட், நகைச்சுவை நடிகர்கள் உட்பட சில கலைஞர்களால் பேச்சு சுதந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
'இந்த விவகாரத்தில், ஹேமந்த் மாள்வியா வரைந்த கார்ட்டூன் எரிச்சலுாட்டுகிறது; முதிர்ச்சியற்றதாக உள்ளது' என்றனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய கார்ட்டூன் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

