முல்லைப் பெரியாறு விவகாரம்: அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
முல்லைப் பெரியாறு விவகாரம்: அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
ADDED : பிப் 19, 2025 02:07 PM

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகன அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் - கேரளா இடையே பல பிரச்னை உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளன.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு கூறியதாவது: இந்த வழக்கை 25 ஆண்டுகளாக இழுத்தடிக்க கேரளா முயற்சி செய்கிறது. அம்மாநிலம் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கேரளா செய்து வருகிறது என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: அடுத்த ஒரு வாரத்திற்குள் மேற்பார்வைக் குழுக்கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் தமிழகத்தில் முன்வைக்கப்படும் பிரச்னைகளுக்கு இரண்டு வாரத்திற்குள் தீர்வு காண்பதுடன், அதில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஏதாவது நடந்தால், கேரளா பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த அணை தொடர்பான வழக்குகள் பல்வேறு அமர்வுகளில் சிதறி கிடக்கின்றன. அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கிறோம் என உத்தரவிட்டு உள்ளது.

