'தலைமை நீதிபதி மீது காலணி வீசியவர் மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை'
'தலைமை நீதிபதி மீது காலணி வீசியவர் மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை'
ADDED : அக் 27, 2025 10:38 PM

புதுடில்லி: 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கடந்த அக்., 6ம் தேதி வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந் தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், 71, என்பவர், நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்தினார். அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.தன் மீது காலணி வீசியவரை மன்னிப்பதாக தலைமை நீதிபதி கவாய் அறிவித்ததை அடுத்து, வழக்கறிஞர் ராகேஷ் விடுவிக்கப்பட்டார்.
எனினும், 'நான் செய்தது சரியானதுதான்; எதிர் காலத்திலும் தொடர்ந்து இப்படி செய்வேன்' என, வழக்கறிஞர் ராகேஷ் ஊடகங்களில் தொடர்ந்து பேசி வந்தார். அவரது வழக்கறிஞர் அங்கீகாரத்தை பார் கவுன்சில் ரத்து செய்தது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பார் கவுன்சில் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய நபரை, கதாநாயகன் போல் சமூக ஊடகங்களில் சிலர் சித்தரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபரும் தன் செயலை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார். இது போன்ற செயல்களை அப்படியே விட்டு விட்டால், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்.
மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பெருந்தன்மையுடன் தன் மீது காலணி வீசிய நபரை மன்னித்தாலும், இது ஒட்டுமொத்த நீதித்துறை சார்ந்த விவகாரம். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாதிடப்பட்டது.
இதை தொடர்ந்து, நீதிபதி சூரியகாந்த் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்ற அறைக்குள் கோஷம் எழுப்புவது, காலணி வீசுவது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அது தொடர்பாக நடவடிக்கை தேவையா; இல்லையா என்பது விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டது. காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது, அவர் மீது தேவையில்லாத கவனத்தை ஏற்படுத்தும்.
அந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அது தானாக மறக்கப்பட வேண்டிய சம்பவம். மேலும், தலைமை நீதிபதி கவாய், இதை பெரிதாக்க விரும்பவில்லை. அவர் மன்னிப்பும் வழங்கி விட்டார். எனவே, இந்த விவகாரத்தில் மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறோம். எனினும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, வழிகாட்டு நெறிமுறை களை வேண்டுமானால் வகுக்கலாம். அதற்கான ஆலோசனைகளை பார் கவுன்சில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

