கொலீஜியம் முறையை எதிர்க்கும் மனு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
கொலீஜியம் முறையை எதிர்க்கும் மனு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : ஏப் 29, 2024 09:52 PM

புதுடில்லி : நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்யும், 'கொலீஜியம்' முறைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, விசாரணை பட்டியலில் சேர்ப்பதற்கு, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றஙகளில் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், பணி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் முடிவு
செய்கிறது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட, ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கியது தான் கொலீஜியம்.நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் இந்த முறைக்கு எதிராக, 2015ல், தேசிய நீதித்துறை நியமன கமிஷன் முறையை உருவாக்கும் சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், இரண்டு சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முடிவு செய்யும் என அறிவிக்கபட்டது.ஆனால், இது சட்டவிரோதமானது என, உச்ச நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், மேத்யூஸ் நெடும்பரா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வில் கூறியதாவது:நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் முறையை கைவிடுவதை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளேன்.ஆனால், இதை விசாரணை பட்டியலில் சேர்ப்பதற்கு பதிவாளர் அலுவலகம் மறுத்து வருகிறது. உடனடியாக பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:அரசியலமைப்பு சட்ட அமர்வு ஒரு வழக்கில் உத்தரவுகள் பிறப்பித்த பின், அந்த சட்டத்தின், 32வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடரும் உரிமையை கோர முடியாது.
அதனால்தான் இந்த மனு, விசாரணை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதில் எந்த உதவியும் செய்ய முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

