sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

/

வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

வக்ப் சட்டத்தை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை இல்லை

13


UPDATED : செப் 16, 2025 04:59 PM

ADDED : செப் 15, 2025 11:45 PM

Google News

13

UPDATED : செப் 16, 2025 04:59 PM ADDED : செப் 15, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வக்ப் சட்டத்திருத்த மசோதாவை நாடு முழுதும் அமல்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்து, வழக்குகளை முடித்து வைத்தது.

நாடு முழுதும் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் வழங்கும் நிலம், சொத்துகளை வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது. இந்த நிர்வாகத்தை சீரமைக்க, 1995ம் ஆண்டின் வக்ப் சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்து, பார்லி.,யில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திருத்த மசோதா பார்லி.,யின் இரு சபைகளிலும் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் கடந்த ஏப்ரலில் சட்டமானது.

இதை எதிர்த்து காங்., தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., உள்ளிட்ட கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வக்ப் சட்டத் திருத்தத்திற்கு முழுமையாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேநேரம் இந்த சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

அதன் விபரம்:

* வக்ப் வாரியத்துக்கு சொத்துகளை தானமாக வழங்க முன்வரும் நபர், 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நிறுத்தி வைக்கிறோம். மாநில அரசுகளும் இதற்கான விதிகளை உருவாக்கும் வரை இந்த சட்டப் பிரிவு நிறுத்தப்படுகிறது.

* வக்ப் வாரிய சொத்து விசாரணை ஷரத்துகளில் ஒரு பிரிவை மட்டும் நிறுத்தி வைக்கிறோம். அதாவது, வக்ப் வாரிய சொத்துகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக வைத்து எந்தவொரு சொத்து ஆவணங்களையும் திருத்தக் கூடாது.

*ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளாகும் வக்ப் சொத்து மீது, தீர்ப்பாயம் முடிவெடுக்கும் வரை, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

*அதே சமயம் அந்த சொத்து தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை விதிக்கிறோம்.

* மத்திய வக்ப் கவுன்சிலின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சமாக 4 பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கலாம்.

* 11 பேர் கொண்ட மாநில வக்ப் வாரியங்களில் அதிகபட்சமாக 3 பேர் வரை முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக நியமிக்கலாம். வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக முடிந்தவரை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை நியமிக்கலாம் என கருதுகிறோம்.

இந்த உத்தரவுகள் அனைத்தும் இடைக்காலமாக பிறப்பிக்கப்படுகிறது. மேலும், இந்த உத்தரவு திருத்தப்பட்ட ஷரத்துகளின் அரசியலமைப்பு தன்மையை நிச்சயம் பாதிக்காது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பும் வரவேற்பு:யாருக்கு சாதகம்?


உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இந்திய ஜனநாயகத்தின் வலிமை, நமது அமைப்புகள் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள விதிகள் குறித்து அரசு ஆராயும்,” என்றார்.



காங்.,பொதுச் செயலர் ஜெயராம் ரமேஷ், ''இந்த உத்தரவு வாயிலாக வக்பு விவகாரத்தில், கலெக்டர்களின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வக்பு சொத்துகளை சந்தேகத்திற்குரிய சவால்களில் இருந்து பாதுகாத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தின் அரசியலமைப்பு மதிப்புகளுக்கு கிடைத்த வெற்றி,'' என்றார்.
'சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப் படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது ' என, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.



ஸ்டாலின் பாராட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின், 'இஸ்லாமியர் மத உரிமை, அடிப்படை உரிமை, அரசியலமைப்பு சட்டத்தை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை தீர்ப்பு வலுப்படுத்துகிறது' என, தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பா.ஜ.,வும், வழக்கு தொடர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என இரு தரப்புகளுமே வரவேற்றுள்ளன. 'வக்பு சட்டத்தில், முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.



- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us