நீதிமன்றங்கள் மீது அவதுாறு பரப்புவதா? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட்கண்டிப்பு! :
நீதிமன்றங்கள் மீது அவதுாறு பரப்புவதா? சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட்கண்டிப்பு! :
ADDED : செப் 21, 2024 02:01 AM

புதுடில்லி மேற்கு வங்கத்தில், 2021 தேர்தலுக்கு பின் அரங்கேறிய வன்முறை தொடர்பான வழக்குகளை, அம்மாநிலத்திற்கு வெளியே மாற்றக்கோரிய வழக்கில், ஒட்டுமொத்த நீதிமன்றங்கள் மீதும் அவதுாறு குற்றச்சாட்டுகள் பரப்பியதற்காக, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று முதல்வரானார்.
தேர்தலுக்கு பின், மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணையை, மேற்கு வங்கத்திற்கு வெளியே மாற்றக்கோரி, 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்தது.
விசாரணை
அதில், 'மேற்கு வங்க நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்தால் நியாயமாக இருக்காது; சாட்சிகள் மிரட்டப்படலாம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் கூறியதாவது:
எதன் அடிப்படையில் சி.பி.ஐ., இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது? ஒட்டுமொத்த நீதித்துறை மீதும் நீங்கள் எப்படி அவநம்பிக்கை கொள்ள முடியும்? மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் விரோதமான சூழல் நிலவுவது போல் சி.பி.ஐ., கூறுகிறது.
ஒரு குறிப்பிட்ட நீதிபதி அல்லது குறிப்பிட்ட மாநிலத்தை, சி.பி.ஐ.,க்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக ஒட்டுமொத்த நீதித்துறையும் செயல்பட வில்லை என கூற முடியாது.
வாபஸ்
உங்களின் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோர் இங்கு வந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியாது.
மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் மீதும் அவதுாறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. சி.பி.ஐ., இது போன்ற செயலில் ஈடுபட்டது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதன் பின், “நீதிமன்றங்கள் மீது அவதுாறை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை,” எனக் கூறிய கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மனுவை வாபஸ் பெற அனுமதிக்கும்படி கோரினார்.
இதற்கு நீதிபதிகள் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டது.