அனுமதியின்றி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
அனுமதியின்றி அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
UPDATED : நவ 08, 2024 03:41 AM
ADDED : நவ 08, 2024 12:04 AM

புதுடில்லி : 'பணமோசடி தொடர்பான வழக்குகளில், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுஉள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது, பண மோசடி தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுப்பது பற்றிய வழக்கை, தெலுங்கானா உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அதிகாரிகள் மீதான பண மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வு, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்தது. அமர்வு கூறிஉள்ளதாவது:
அரசு அதிகாரிகள் தங்களுடைய பணியை செய்யும்போது நடைபெறும் தவறுகள், குற்றங்கள் மீது விசாரணை நடத்துவதற்கு உரிய அதிகார அமைப்பிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என, சட்டப் பிரிவுகள் கூறுகின்றன.
அதிகாரிகள் மீது பொய் வழக்குகள் தொடர்வதை தடுக்கவும், அவர்களுடைய பணி பாதிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த சட்டப் பிரிவு உள்ளது.
நேர்மையான அதிகாரிகளை பாதுகாப்பதற்காக இந்த சட்டப் பிரிவு உள்ளது. அதே நேரத்தில் இதில் நிபந்தனையும் உள்ளது.
அதாவது முன் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி, அதிகாரிகள் மீது பண மோசடி வழக்கில் நடவடிக்கை எடுப்பதற்கு அமலாக்கத் துறையும் முன் அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.