மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!: ஈ.டி., சோதனையில் குறுக்கிடுவதா என கேள்வி
மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!: ஈ.டி., சோதனையில் குறுக்கிடுவதா என கேள்வி
UPDATED : ஜன 16, 2026 01:13 AM
ADDED : ஜன 16, 2026 01:10 AM

புதுடில்லி 'மேற்கு வங்கத்தில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையின் சோதனையில் மாநில அரசு தலையிட்டது மிகவும் கடுமையான செயல்' என தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா, போலீஸ் டி.ஜி.பி., ராஜீவ் குமார் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் ஏப்ரலில் தமிழகத்துடன் சேர்த்து இங்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
பண மோசடி
ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின், திரிணமுல் காங்., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும் உள்ளார்.
நிலக்கரி ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், கொல்கட்டாவில் உள்ள ஐ - பேக் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் பிரதீக் ஜெயின் வீட்டில், அமலாக்கத் துறையினர் கடந்த 8ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது, போலீஸ் உயரதிகாரிகள் புடைசூழ பிரதீக் ஜெயின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மம்தா, அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றார்.
சோதனையில், மேற்கு வங்க அரசு குறுக்கிட்டதை எதிர்த்தும், இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரியும் அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:
மேற்கு வங்கத்தில் அமலாக்கத் துறையின் சோதனையின்போது, மாநில முதல்வர் மம்தா அத்து மீறி, ஆவணங்களை அள்ளிச் சென்றுள்ளார்.
பணிநீக்கம்
இது, ஒரு அப்பட்டமான திருட்டு. இது போன்ற செயல்கள், அரசு பணி செய்வோர் மற்றும் பாதுகாப்பு படையினரின் மன உறுதியை குலைக்கும். சோதனையில் மாநில அரசு தலையிடுவது, பின் தர்ணாவில் அமர்வது போன்றவற்றை அனுமதித்தால், எதிர்காலத்தில், இதுவே ஒரு முன்னுதாரணமாகி விடும்.
இந்த சோதனையின்போது, முதல்வர் மம்தாவுடன், மாநில டி.ஜி.பி., ராஜீவ் குமார் மற்றும் உயரதிகாரிகள் பலர் இடம் பெற்றிருந்தனர்.
சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, டி.ஜி.பி., உள்ளிட்ட போலீசாரும் இதில் பங்கேற்றனர். ராஜீவ் குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
அரசின் குறுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ''கடந்த 2021ல் இருந்து திரிணமுல் காங்கிரசின் தேர்தல் நடவடிக்கைகளை ஐ - பேக் நிறுவனம் கவனித்து வருகிறது. நிலக்கரி ஊழல் குறித்த கடைசி வாக்குமூலம் 2024ல் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை அமலாக்கத் துறை என்ன செய்தது?
''அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், திரிணமுல் காங்-., அரசியல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது,'' என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
எந்தவொரு கட்சியின் தேர்தல் பணிகளிலும் தலையிட, மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரமில்லை.
அதேசமயம், மத்திய அமைப்புகள் ஏதேனும் ஒரு குற்றத்தை விசாரிக்க நேர்மையுடன் செயல்படும் போது, மாநில போலீசோ அல்லது கட்சிகளோ தடுக்கும்பட்சத்தில், அது நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.
தடை
எனவே, மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, டி.ஜி.பி., ராஜீவ் குமார் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் இது தொடர்பாக பதிலளிக்க வலியுறுத்தி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
ஐ - பேக் நிறுவனம் மற்றும் பிரதீக் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிராக, மேற்கு வங்க போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது.
சோதனையின் போது எடுக்கப்பட்ட 'சிசிடிவி' காட்சிகளை, விசாரணை முடியும் வரை மாநில போலீசார் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

