கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் புரட்சி; கவர்னரிடம் மன்னிப்பு கோர அனுமதி
கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் புரட்சி; கவர்னரிடம் மன்னிப்பு கோர அனுமதி
UPDATED : ஜூலை 20, 2025 03:06 AM
ADDED : ஜூலை 20, 2025 12:36 AM

புதுடில்லி : கர்நாடகாவில், வருங்கால கணவரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தவிர, கொலை வழக்கில் தொடர்புடைய அந்த பெண் உள்ளிட்ட நான்கு பேரும் கவர்னரிடம் மன்னிப்பு கோரவும் அனுமதி அளித்துள்ளது.
விசித்திரமான சில வழக்குகள் அவ்வப்போது நீதிமன்றங்களின் கதவுகளை தட்டியபடி தான் இருக்கின்றன. அப்படியான வழக்குகளில் சில நேரம் புரட்சிகரமான உத்தரவுகளையும் நீதிமன்றங்கள் பிறப்பித்துவிடுகின்றன.
அந்த வகையில் கர்நாடகாவில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் குரல் கொடுத்திருக்கிறது.
சரியாக, 22 ஆண்டுகளுக்கு முன், சட்டப்படிப்பு படித்து வந்த கல்லுாரி மாணவி சுபா, அவரது நண்பர்கள் அருண் வர்மா, வெங்கடேஷ் மற்றும் தினேஷை, கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
அப்போது சுபாவுக்கு 20 வயது தான். வீட்டில் அவருக்கு திருமணத்தை முடிவு செய்த பெற்றோர் 2003, நவ., 30ல் நிச்சயதார்த்தமும் நடத்தினர். ஆனால், பெற்றோரின் முடிவில் சுபாவுக்கு உடன்பாடு இல்லை; நண்பர்களிடம் கூறி அழுது இருக்கிறார்.
ஆயுள் தண்டனை
எல்லாருமே இளசுகள் என்பதால், திருமணத்தை நிறுத்தி சுபாவை காப்பாற்ற அதிரடியாக முடிவெடுத்தனர். நிச்சயித்த மாப்பிள்ளையை சுபா மூலம் தனியே ஹோட்டலுக்கு அழைத்து வரச் செய்த நண்பர்கள், வீடு திரும்பும் வழியில், ஆள் அரவமற்ற பகுதியில் மாப்பிள்ளையின் பின்னந்தலையில் இரும்பு ராடால் அடித்து விட்டு தப்பியோடினர்.
இதில் நிலைகுலைந்து விழுந்த மாப்பிள்ளை மறுநாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சுபா மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுபாவும், அவரது நண்பர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வு, புரட்சிகரமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:
பிரச்னைக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என தெரியாமல் தவறான முடிவை எடுத்ததன் விளைவாக ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பறிபோயிருக்கிறது. அதற்காக சுபாவை மன்னிக்க முடியாது. 2003ல் இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளும் உருண்டோடிவிட்டன.
சிறந்த வழி
இந்த வழக்கில் கொலை செய்யும் அளவுக்கு சுபாவை துாண்டியது யார் என்பதை முடிவு செய்வது கடினம். இருந்தாலும், சமூக கோட்பாடுகளின் தோல்வி, பாகுபாடு, அலட்சியம் ஆகியவையே இளம் வயதான சுபாவை கொலை செய்ய துாண்டியிருக்கிறது.
இத்தகைய சூழலில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவராகிறார். அவரை கருணை மனப்பான்மையுடன் திருத்துவது தான் சிறந்த வழியாக இருக்கும். சமூக கட்டமைப்புக்குள் அவரை மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கான பொறுப்பு ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கிறது.
சமூகத்துடன் சுமுகமாக வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தர வேண்டுமே தவிர, தண்டனை கொடுத்து விலக்கி வைக்கக் கூடாது.
எனவே, சுபாவும், குற்றஞ்சாட்டப்பட்ட அவரது நண்பர்களும் கர்நாடக கவர்னரிடம் மன்னிப்பு கோர இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது. அது வரை எட்டு வாரங்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.